🌺பாரதியின் செல்லம்மா… இது அவள் சொல்லம்மா…🌺

(நன்றி: Mantras & Miracles - முகநூல் பக்கம்)

1951ஆம் ஆண்டு திருச்சி வானொலியில்
"என் கணவர்" என்ற தலைப்பில் மஹாகவி பாரதியாரின் மனைவி திருமதி செல்லம்மாள் பாரதி ஆற்றிய உரை.

எனது அன்பான சகோதரர்களே! குழந்தைகளே!!
என்னிடம், எங்களது வாழ்க்கையைப் பற்றிக் கூறும்படி கேட்கிறீர்கள்... 'மானிடச் சாதிக்கு அமரவாழ்வு தரவேண்டும்' என்ற உன்னத நோக்கத்துடன் உழைத்தவர் என் கணவர்.

நான் படித்தவளல்ல. ஆயினும் மஹாகவியுடன் எனது ஏழு வயது முதல் முப்பத்திரண்டு வயது வரை வாழும் பாக்கியம் பெற்றிருந்தேன்.
சில அன்பர்கள் என்னிடத்தில் சில கேள்விகள் கேட்கிறார்கள்; அதாவது,

“பாரதியார் தம் கொள்கைகளை நாட்டிற்கு உபதேசிப்பதோடு, நாட்டில் பரப்புவதோடு நிறுத்திக்கொண்டாரா?, அல்லது வீட்டிலும் பின்பற்றி நடத்திக் காட்டினாரா?”

என. ’ஆம், தம் கொள்கைகளை வீட்டிலும் நடத்திக் காட்டினார் அவர்’
என்று சந்தோஷமாகச் சொல்லுகிறேன்.
என் கணவர் இளம் வயதில் கரைகடந்த உற்சாகத்தோடு தேச சேவையில் இறங்கினார்.

சென்னையில் அதற்குத் தடை ஏற்படும் என்று அவருக்குத் தோன்றியபடியால் புதுவை சென்றார். அந்தக் காலத்து தேசபக்தருக்கு, புதுச்சேரி புகலிடமாயிருந்தது.
புதுவையில் பத்து வருடம் வசித்தோம். அரசியலில் கலந்துகொள்ள அவருக்கு அங்கு வசதி இல்லாதிருந்தும், அவர் எப்போதும்

’நாடு சுதந்திரம் பெறுவதற்கு என்ன வழி?’ என்பதை யோசிப்பதிலும், ’பாரத நாடு எவ்விதமான சுதந்திரம் பெற வேண்டும்?’

என்று கனவு காணுவதிலும். பொழுதைச் செலவிடுவார்.
அவர் அறியாதது... பணமுண்டாக்கும் கலை! என் கணவர், வயிற்றுப் பாட்டுக்காகத் தமிழ்த் தொண்டு செய்யவில்லை. அவர் எழுதிய பாடல்களை விற்று ஒரு லாபமும் பெறவில்லை.

ஆற அமர உட்கார்ந்து யோசித்துக் கவிதை எழுதமாட்டார். இரவோ பகலோ, வீட்டிலோ வெளியிலோ, கடற்கரையிலோ, அவ்வப்பொழுது தோன்றும்
உணர்ச்சிப் பெருக்கிற் பிறந்தவையே அவரது கவிதைகள்.

ஒரு சம்பவம் என்னால் மறக்க முடியாது. மதியம் ஒரு மணி ஆகிவிட்டது. சாப்பிடுவதற்கு அவர் வரவில்லை. மெதுவாகச் சென்று, தூரத்திலிருந்து எட்டிப் பார்த்தேன்...

என் கணவரின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடிக் கொண்டிருந்தது.
"இனி மிஞ்ச விடலாமோ?" என்று அவர் உதடுகள் முணுமுணுத்தன. அருகில் போய் என்னவென்று கேட்க என் மனம் துடிதுடித்தது. ஆனால் பயமும் ஒரு புறம் ஏற்பட்டது.

'ஏதோ மகத்தான துயரம் ஏற்படாவிட்டால் அவர் கண்களிலிருந்து நீர் வராது. என்ன விஷயமோ?'

என்ற திகில் கொண்டேன்.
கணவர் திடீரென நிமிர்ந்து பார்த்தார். 'செல்லம்மா, இங்கே வா' என்றார். சென்றேன். கீழேயிருந்த எங்கள் குழந்தைகளையும் அழைத்தார். 'நமது இந்திய மாதர்கள் அந்நிய நாட்டில் படும் பாட்டைக் கேளுங்கள்' என்றார்.

"கரும்புத் தோட்டத்திலே" என்ற பாட்டை அவர் பாடியதைக் கேட்ட நாங்களும்
விம்மி விம்மி அழுதோம். மறுநாள் அந்தப் பாட்டு சென்னையில் ஒரு பொதுக்கூட்டத்தில் பாடப்பட்டது.

அதைக் கேட்ட ஜனங்கள் எவ்விதத்திலும் ஒப்பந்தக் கூலி முறையை ஒழிக்கவும், அந்நிய நாடு சென்ற நமது நாட்டுத் தொழிலாளரின் குறைகளைத் தீர்க்கவும் கங்கணம் கட்டிக் கொண்டார்கள்.
இன்னுமொரு மறக்க முடியாத ஞாபகம். அவர் மண்ணுலகை விட்டு நீங்குவதற்குச் சில நாட்கள் முன்னதாக, ஹிரண்யனுக்கும் பிரஹலாதனுக்கும் நடந்த சம்வாதமாக, சில வரிகளே கொண்ட ஒரு பாடல் எழுதினார்.

அந்தப் பாட்டை அவர் பாடிய விதத்தை எவ்விதம் வர்ணிப்பது!

நாராயண நாமத்தை அவர் உச்சரிக்கும் பொழுதும்,
பாடும் பொழுதும், உடல் புல்லரிக்கும். அவர் பூத உடல் மறையும் வரை... இறுதிவரை, நாராயண நாமத்தை ஜபித்தார்.

"வறுமை, கவிஞனின் தனி உடைமை. கவிஞனுக்கு இந்த மண்ணுலகில் இன்பம் அளிப்பது கவிதை; ஆனால் வயிற்றுக்கு உணவு தேடி வாழும் வகையை அவன் மனைவிதான் கண்டுபிடிக்க வேண்டி வருகிறது...
காதல் ராணியாக மனைவியைப் போற்றும் கவிஞன் அவளுக்குச் சாதமும் போடவேண்டும் என்ற நினைவேயின்றிக் காலம் கழித்தானே... ஆனால், என்ன செய்ய முடியும்?"

ஊருக்குப் பெருமை என் வாழ்வு. வையகத்தார் கொண்டாட வாழவேண்டும் என்ற என் கனவு ஓரளவு பலித்ததென்னவோ உண்மைதான்.
இன்று என் கணவரின் புகழ் விண்முட்டிச் செல்கிறது.

“இன்று மகாகவியின் மனைவியாகப் போற்றப்படும் நான் அன்று பைத்தியக்காரன் மனைவியென்று பலராலும் ஏசப்பட்டேன்...”

கவிஞர்களில் பலதரப்பட்டவர்கள் இருக்கிறார்கள். கடவுளைப் பக்தி செய்யும் கவிஞன், காவியம் எழுதும் கவிஞன்,
இவர்களைப் புற உலகத் தொல்லைகள் சூழ இடமில்லை.

எனது கணவரோ, கற்பனைக் கவியாக மட்டுமல்லாமல் தேசியக் கவியாகவும் விளங்கியவர். அதனால் நான் மிகவும் கஷ்டப்பட்டேன்.

கவிதை வெள்ளத்தை அணை போட்டுத் தடுத்தது அடக்குமுறை. குடும்பமே தொல்லைக்குள்ளாகியது. ஆனால் நுங்கும் நுரையுமாகப் பொங்கிவரும்
புது வெள்ளம் போல அடக்குமுறையை உடைத்துக்கொண்டு பாய்ந்து செல்லும் அவர் கவிதை.

காலையில் எழுந்ததும் கண்விழித்து, மேடை மேல், மேலைச்சுடர் வானை நோக்கி வீற்றிருப்பார்.

ஸ்நானம் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு விதத்தில் அமையும். ஸுரிய ஸ்நானம்தான் அவருக்குப் பிடித்தமானது.
வெளியிலே நின்று நிமிர்ந்து ஸுரியனைப் பார்ப்பதுதான் வெயிற் குளியல். ஸுரியகிரணம் கண்களிலேயுள்ள மாசுகளை நீக்கும் என்பது அவர் அபிப்பிராயம்.

காலையில் காப்பி, தோசை பிரதானமாயிருக்க வேண்டும் அவருக்கு. தயிர், நெய், புது ஊறுகாய் இவைகளைத் தோசையின் மேல் வைத்து உண்பார்.
அவருக்குப் பிரியமான பொருளைச் சேகரித்துக் கொடுத்தால், அவரது நண்பர்களான காக்கையும் குருவியும் அதில் முக்கால் பாகத்தைப் புசித்து விடுவார்கள்.

எதை வேண்டுமானாலும் பொறுக்க முடியும்; ஆனால் கொடுத்த உணவைத் தாம் உண்ணாமல் பறவைகளுக்குப் போட்டுவிட்டு நிற்கும் அவருடைய தார்மிக உணர்ச்சியை
மட்டும் என்னால் சகிக்கவே முடிந்ததில்லை.

பெண் விடுதலை அவசியம் என்ற முடிவு கண்டு, நடைமுறையில் நடத்துவதற்குத் துடிதுடித்தார் என் கணவர். இந்த முடிவை அவர் காண்பதற்குள் நான் பட்ட பாடு சொல்லுந்தரமன்று.

மஹாகவி நாட்டிற்காக, அதன் சுதந்திரத்திற்காக வாழ்ந்தார்.
தமிழ் பண்பாட்டில் சிறந்த அவர் ஈகை, அன்பு, சகிப்புத்தன்மை முதலான பண்புகளைக் கடைப்பிடித்து வாழ்ந்தது அதிசயமன்று. தூங்கிக் கிடந்த தமிழரை விழிப்புறுத்தியதும் அதிசயமன்று;

ஆனால் இன்று அவரது பூத உடல் மறைந்த பின்பும் தமிழ் பேசும் ஒவ்வோர் உயிரினிடத்தும் அவர் கலந்து நிற்பதுதான் அதிசயம்
என்று எனக்குத் தோன்றுகிறது.

"விண்டுரைக்க மாட்டாத விந்தையடா!""

என்று அவரது கவிதை மொழியில்தான் இந்த மகிழ்ச்சியைத் தெரிவிக்க வேண்டியிருக்கிறது.

நன்றி: செல்லம்மாள் பாரதி.

🍁வாஸவி நாராயணன்🍁
@threader_app compile
You can follow @VasaviNarayanan.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.