80களில் ஊரில் விநாயகர் சதுர்த்தி என்பதற்கான எந்த அறிகுறியும் அன்று காலை 6 மணி வரை எங்களுக்குத் தெரியாது. கிட்டத்தட்ட 5000 குடும்பங்களுக்கு மேல் வசித்த ஊர். கடைவீதியில் ஒருவர் மட்டும், அன்று களிமண்ணையும், ஒரு விநாயகர் அச்சையும் வைத்திருப்பார். விநாயகர் தேவைப்படுபவர்கள் தங்கள்
வீட்டு மனைப்பலகையை நன்கு கழுவி, அதில் இரண்டு பக்கமும் பார்டர் போல கோல மாவில் ஒரு இழு இழுத்து கொடுத்து விடுவார்கள். அச்சில் இருந்து எடுத்த பிள்ளையாரை அதில் வைத்து வீட்டுக்கு கொண்டு போவார்கள். அதிகபட்சம் 20 விற்கும். அந்தக்காலத்தில் இதை வேடிக்கை பார்ப்பது ஒரு பொழுதுபோக்கு.
அச்சுப் பிள்ளையாருக்கு ஒரு ஜான் எருக்கம் பூ மாலையை அதற்கு சூட்டி, குன்றி மணியால் கண் வைப்பார்கள். மூன்றாம் நாள் ஆற்றிலோ, ஊர் மொட்டைக் கிணற்றிலோ அதைத் தூக்கிப் போட்டு விடுவார்கள். எங்கள் தெருவில் அரிதாகச் சில வீடுகளில், கொழுக்கட்டை செய்வார்கள். இவ்வளவு தான் விநாயகர் சதுர்த்தி.
அப்போது தான் ராம கோபாலன் என்பவர் கீழக்கரை பகுதிகளில் மசூதி இருக்கும் தெரு வழியே விநாயகர் ஊர்வலம் நடத்தி பிரச்சினை ஆனது என தகவல் வந்தது. பின் ஒவ்வொரு ஆண்டும் அது போல் ஆனது. 90களின் ஆரம்பத்தில் நான் சென்னைக்கு வந்த போது, பாரீஸ் கார்னர் பகுதியில் வேலை. அங்கு தான் பிள்ளையார் குடை
என்ற ஒன்றைப் பார்த்தேன். அப்போது திருவல்லிக்கேணி பகுதியில் முரளி கபே என்ற உணவகம் நடத்தி வந்த இந்து முன்னணி பிரமுகர், ஐஸ் ஹவுஸ் மசூதி வழியே பிள்ளையார் ஊர்வலம் சென்று கடலில் கரைக்க வேண்டும் என்று பிரச்சினை செய்து கொண்டிருந்தார். அதைத் தொடர்ந்து, சில கலவரங்கள். ஆண்டுக்கு ஆண்டு
பிளாஸ்டர் ஆப் பாரிஸில் செய்யப்பட்ட பெரிய விநாயகர் சிலைகள் அதிகரிக்க ஆரம்பித்தது. ஒரு கட்டத்தில் கலைஞர் கூட, இதனால் வாதாபியில் இருந்து வந்த கணபதிக்கு ஏன் இப்படி என கேட்டார். சாளுக்கிய நாட்டின் இரண்டாம் புலிகேசியை, நரசிம்ம பல்லவன் வென்று, திரும்பிய போது கொண்டு வந்தவற்றில்
முக்கியமானது விநாயகர். இங்கு இப்படிப்பட்ட கலாச்சாரம் இல்லை. ஏன் இதன் பெயரால் மத வெறியைத் தூண்டுகிறீர்கள் எனக் கேட்டார். கலைஞர் ஆட்சியில் இருக்கும் போது, இதைத் தீவிரமாக கொண்டாடும் அமைப்புகள், ஜெயலலிதா ஆட்சியில் அடக்கியே வாசிக்கும். இப்போது, இந்த கொரோனா பாதிப்பு காலத்திலும்
விநாயகர் ஊர்வலங்களை நடத்த வேண்டுமென, பா ஜ க துடிக்கிறது. கொரோனோவிடம் இருந்து மக்களைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு ஒரு பாதுகாப்புக் கவசம் கூட வாங்கித்தர முன்னெடுக்காத கட்சி, அவர்களின் வேலையை இன்னும் அதிகப்படுத்தும் விதத்தில்
இந்த ஊர்வலங்களை நடத்த முயல்கிறது. சக மனிதர்களின் மீது எந்த ஒரு அக்கறையும் இல்லாமல் அதிகார வெறி கொண்டவர்களால் மட்டுமே இது போல சிந்திக்க இயலும்.