இன்று குன்றக்குடி அடிகளாரின் 95-வது பிறந்தநாள். இதனையொட்டி 'Being hindu and being secular' எனும் பேராசிரியர் எம்.எஸ்.எஸ்.பாண்டியன் எழுதிய Economic and Political Weekly கட்டுரையில் இருந்து சில பகுதிகள்: 1/n
காவி உடை அணிந்து, தூயவெண் தாடி அலைபாயத் தோற்றமளித்த குன்றக்குடி அடிகளார் என்று பரவலாக அறியப்பட்ட ஸ்ரீ தெய்வசிகாமணி அருணாச்சல தேசிகர் (1925-95) குன்றக்குடி-திருவண்ணாமலை ஆதீனத்தின் மடாதிபதியாக நாற்பது ஆண்டுகள் திகழ்ந்தார். 2/n
அவர் 1995-ல் இறந்து போது தமிழகம் முழுக்கப் பெருந்திரளான மக்கள் கண்ணீர் வடித்தார்கள். அவருக்கு எண்ணற்ற இறை மறுப்பாளர்கள், மதச் சிறுபான்மையினர் அஞ்சலி செலுத்தினார்கள். 3/n
அவரின் வாழ்க்கையின் மூலம் மதம் என்பது உலகத்தின் ஏற்றத்தாழ்வுகளோடு அயராத போரிடுகிற மானுட யத்தனம், அயராத உழைப்பின் கருவியாகவும் இருக்க முடியும் என அடிகளார் உணர்த்தினார். இப்படிப்பட்ட மத நம்பிக்கையுணர்வையே திமுக தனக்கே உரிய காரணங்களுக்காக ஏற்றுக்கொண்டது. 4/n
குன்றக்குடி-திருவண்ணாமலை ஆதீனத்தின் 45வது மடாதிபதியாக 1952-ல் அவர் பொறுப்பேற்றுக்கொண்ட போது, தமிழகத்தைப் பெரியாரின் இறைமறுப்புப் பிரச்சாரம் சூழ்ந்து கொண்டது. சைவ பழமைவாதிகள் அடிகளார் பெரியாரை எதிர்கொள்வார் என்று எதிர்பார்த்தார்கள். 5/n
சைவ பழமைவாதிகளின் அமைப்பான அருள்நெறி கூட்டம் அடிகளாரின் அற்புதமான வாதத்திறனை பெரியாரின் நாத்திகவாத பரப்புரைகளால் ஏற்பட்ட பின்னடைவில் இருந்து மீட்டெடுக்கப் பயன்படுத்திக்கொண்டது. ஆனால், பெரியாருக்கும், அடிகளுக்கும் இடையேயான இந்த முரண்பாடு வெகுகாலத்துக்கு நீடிக்கவில்லை. 6/n
1955-ல் இருவரும் சந்தித்துக் கொண்டார்கள். அவர்களின் ஆரம்பக் கால மோதலால் வாழ்நாள் முழுக்கத் தீவிரமாக இணைந்து இயங்குவதற்கான விதை போடப்பட்டது. அடிகளார் தன்னுடைய காவி உடையையோ, சைவ சமய நம்பிக்கையையோ துறக்கவில்லை. 7/n
அதற்கு மாறாக, "சாதி, சாதி அமைப்பு ஒழிப்பிற்கு என்னால் ஆன எல்லாவற்றையும் முழு மூச்சாகச் சமூகச் சீர்திருத்தம் நோக்கிய பயணத்திற்காக முன்னெடுப்பேன். ... 8/n
யாருடைய எதிர்ப்பிற்கும் நான் அச்சப்படவில்லை, கவலைப்படவில்லை. பெரியாரின் சாதி எதிர்ப்புப் போராட்டங்களில் நான் கலந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன்." என முழங்கினார். அவரால் கூட்டப்பட்ட பட்டி மன்றங்களில் சாதி, தீண்டாமை முதலியவை பேசுபொருள்களாக மாறின. 9/n
1970-ல் திமுக அரசு அர்ச்சகர் சட்டத்தைக் கொண்டுவந்தது. அதன்மூலம், அணைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்கிற வாய்ப்பு ஏற்பட்டது. இந்தச் சட்டத்தைத் தமிழ் பிராமணப் பழமைவாதிகள் மிகத்தீவிரமாக எதிர்த்தார்கள். இந்தப் பரப்புரையில் அடிகளார் பங்குகொள்ள மறுத்தார். 10/n
அதற்குமாறாக, அடிகளார் மிக முக்கியமான, தீவிரமான உறுப்பினராகத் திகழ்ந்த சைவ மடங்களின் கூட்டமைப்பான தெய்வீக பேரவை இந்தச் சட்டத்துக்கு முழு மனதான ஆதரவை நல்கியது. சாதி அமைப்புக்கு எதிரான அவருடைய வாழ்நாள் போராட்டம் அவரைச் சனாதன இந்துமதத்தைக் கூர்மையாக விமர்சிக்க வைத்தது. 11/n
பல்வேறு இந்து மத மடாதிபதிகள் மாநாட்டில் 1983-ல் கலந்து கொண்ட அடிகள் மடாதிபதிகளை நோக்கி இப்படிக் கேள்வி எழுப்பினார்:

இந்து மத ஒற்றுமை பேசும் எந்த மடாதிபதியாவது ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்த ஒருவரை மடாதிபதியாக அறிவித்து இருக்கிறாரா? 12/n
ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்த ஒருவர் கிறிஸ்துவ மதத்திற்கு மாறினால் அவரால் கார்டினலாக மாற முடிகிறது; அவரால் பாதிரியாராகவும் ஆக முடிகிறது. இந்து மதத்தில் நிலைமை வேறாக அல்லவா இருக்கிறது? குறைந்தபட்சம் ஒடுக்கப்பட்ட மக்களை வேதம் படிப்பதற்காவது அனுமதித்தீர்களா? 13/n
குறுகிய சைவ சமயப்பற்றை விடச் சமூகம் சார்ந்த கவலைகளுக்கு அடிகளார் முக்கியத்துவம் தந்த உன்னதமான தருணம் 1971-ல் நடைபெற்றது. திராவிடர் கழகம் 1971-ல் நடத்திய மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாடு கசப்பான சர்ச்சைக்கு வழிவகுத்தது. அவர் இறை மறுப்பாளர்கள் பக்கம் நின்றார். 14/n
சிறிய அறிக்கையில் தன் அனுதாபங்கள் எந்தப் பக்கம் உள்ளது என்பதைக் கச்சிதமாக எளிய வார்த்தைகளில் அடிகள் ஆணித்தரமாக வெளிப்படுத்தினார்: "இன்றைக்கு இறை நம்பிக்கையானது ஆதிக்கச் சாதிகளின் நலன் சார்ந்ததாக இருக்கிறது.இறை மறுப்பே பெரும்பான்மை தமிழ் மக்களின் நலன் சார்ந்து இயங்குகிறது." 15/n
தமிழ்நாட்டில் சைவ சமய மரபுக்கும்,திமுகவின் கொள்கைக்கும் ஏற்ப தமிழ் மொழி சார்ந்து தீவிரமான அர்ப்பணிப்பை அடிகளார் வெளிப்படுத்தினார். இந்தி திணிப்புக்கு எதிராகத் தீவிரமான போராட்டங்கள் 1965-ல் தமிழகம் முழுக்க நடைபெற்ற போது குன்றக்குடியில் பேரணி நடத்தி, அடிகளார் சிறை புகுந்தார். 16/n
புகழ்பெற்ற சிதம்பரம் ஆலயத்தின் தீட்சிதர்கள் கோயில் கருவறைக்குள் 1983-ல் நுழைய அடிகளாருக்கு அழைப்பு விடுத்த போது அவர் அதனை நிராகரித்தார்.

இறைவனுக்குப் பக்தர்களுக்குப் புரியாத வடமொழியில் அர்ச்சனை நடத்தப்படும் ஆலயத்தின் வாசலை மிதிக்க மாட்டேன் எனப் பொதுவெளியில் பேசினார். 17/n
திமுக அரசு ஆலயங்களில் தமிழ்வழி அர்ச்சனையை ஊக்குவித்தது என்பது நன்றாகத் தெரிந்த தகவலாகும்.

அடிகளாரும் திமுகவை போல அறிவியலையும், மத நம்பிக்கையுணர்வையும் இயல்பாகக் கலந்து இயங்கினார். 18/n
அவரின் அறிவியல் பார்வை குன்றக்குடியிலும், அதன் பக்கத்து கிராமங்களிலும் 1977-ல் அடிகளார் மேற்கொண்ட ஊரக மறுவாழ்வு திட்டங்களில் வெளிப்பட்டது. சீன கம்யூன்களால் ஈர்க்கப்பட்டு குன்றக்குடி பகுதியில் சுயசார்புள்ள சமூகங்கள் எழுவதற்கு உதவினார். 19/n
அறிவியல், தொழில்நுட்பங்களைக் கிராம மக்களுக்குக் கிராம திட்டப்பேரவைகளின் மூலம் அந்தத் திட்டங்கள் கொண்டு சேர்த்தன. காரைக்குடியின் மத்திய மின்வேதியியில் ஆய்வகத்தின் விஞ்ஞானிகளின் நிபுணத்துவத்தைக் கொண்டு இந்தக் கிராமங்களின் மூலப்பொருள் பயன்பாட்டு பாணியை மாற்றியமைத்தார். 20/n
அதன்மூலம் கிட்டத்தட்ட அனைத்து கிராம மக்களுக்கும் வேலை வாய்ப்பை ஏற்படுத்தினார். "குன்றக்குடி மாதிரி" ஊரக வளர்ச்சி அகராதியின் பொன்னேடாக மாறியது. மத்திய அறிவியல், தொழில்நுட்ப அமைச்சகம் மக்களிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்த்ததற்காக 1992-ல் விருது வழங்கியது. 21/n
இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக் கழகத்தின் மேனாள் துணைவேந்தர் வா.செ. குழந்தைசாமி, "நம்முடைய அறிவுக்கு எட்டியவரை மக்களிடையே அறிவியல், அறிவியல் மனப்பான்மையைப் பெருக்கியதற்காக விருது பெற்ற ஒரே மதத்தலைவர் அடிகளார் மட்டுமே." என்று புகழாரம் சூட்டினார். 22/n
அவருடைய அறையில் லெனின் படம் தொங்கிக்கொண்டு இருந்தது. அடிகளார் மார்க்ஸ் குறித்துப் பேசுகையில்:

மார்க்சிற்கு முந்தைய தத்துவ அறிஞர்கள் உலகம் எப்படி இருந்தது, எப்படி இருக்கிறது என்று எழுதினார்கள். 23/n
எந்தத் தத்துவ அறிஞரும் உலகம் எப்படி இருக்க வேண்டும், என்னென்ன மாற்றங்கள் தேவை என்று சொல்லவில்லை. உலகம் எப்படி இருக்க வேண்டும், அது எப்படி மாறவேண்டும் என்று சிந்திப்பது மட்டுமல்ல, எப்படி மாறவேண்டும் என யோசிப்பதும் நம்முடைய கடமையாகும். அதுவே மார்க்சின் தத்துவமாகும். 24/n
அவருடைய இறுதிக்காலத்தில் உடல்நலம் சீர்கெட்டு இருந்த நிலையிலும், பல்வேறு மதத்தினரிடையே ஒற்றுமையை ஏற்படுத்த அயராது முயன்றார். கன்னியாகுமாரி மாவட்டத்தில் மதக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு 1982-ல் அடிகளார் சென்று தன்னுடைய அளவில்லாத தீரத்தை வெளிப்படுத்தினார் 25/n
அவர் பாபர் மசூதி இடிப்பை கடுமையாகச் சாடினார். அவர் மத நல்லிணக்கத்தை பேணுவதற்கு பலரும் மேற்கொண்ட முன்னெடுப்புகளில் ஆர்வத்தோடு கலந்து கொண்டார். சிறிய குழுக்கள் ஏற்பாடு செய்த முயற்சிகளில் கூடப் பங்குகொண்டார். 26/n
அவருடைய இறுதி ஊர்வலத்தில் பெருந்திரளான இஸ்லாமியர்கள் பிராமணரல்லாத இந்துக்களோடு எந்த மனத்தடையும் இல்லாமல் கலந்து கொண்டார்கள் என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. 27/n
அவருடைய இறுதி ஊர்வலத்தில் பெருந்திரளான இஸ்லாமியர்கள் பிராமணரல்லாத இந்துக்களோடு எந்த மனத்தடையும் இல்லாமல் கலந்து கொண்டார்கள் என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. 28/n
அடிகளாரின் சமூகம் சார்ந்த கவலைகளும், மத நம்பிக்கையுணர்வின் உலகப்பொதுமையும் திருச்சியில் 1982-ல் அவர் தலைமையில் நடைபெற்ற அருள்நெறி திருக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் தெளிவாக வெளிப்பட்டது. 29/n
அந்த அமைப்பின் பொதுக்குழு கடவுள் நம்பிக்கையை அங்கீகரித்தோடு, அடுத்ததாக, " தீண்டாமை, சாதி ஒழிப்பில் ஈடுபடும் திராவிடர் கழகம் முதலிய இயக்கங்கள், வறுமையற்ற சமூகம் சார்ந்து இயங்கும் இடதுசாரி அமைப்புகளை ஆகியோர்களைக் கூட்டாளிகளாகக் கொண்டு இயங்க வேண்டும். ...30/n
அதே சமயம், சாதி வேறுபாடு, வறுமை, ஆதரவின்மை ஆகியவற்றைக் கர்மாவின் பலன் எனும் பிராமணியம், அதனோடு தொடர்புடைய இயக்கங்கள் நம்முடைய எதிரிகள்" என்று அந்தப் பொதுக்குழு தீர்மானம் இயற்றியது. 31/n
ஆகவே, அடிகளுக்கு மதம், இறை மறுப்பு, கம்யூனிசம் ஆகியவை இணைந்து சமத்துவ உலகை சமைக்க முடியும். அடிகளார் இப்படிப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்றுவதைச் சாதிக்க முடியுமென்றால், ஆன்மிகம் என்று எது நம்பப்படுகின்றதோ அதிலிருந்து மாறுபட்ட ஆன்மிகத்தை அவர் நம்பினார். 32/n
அவரே கூறுவது போல "பலரும் ஆன்மிகம் எனின் துறவு சார்ந்தது என எண்ணுகிறார்கள்.அது பிழையானது.உலகை வெறுப்பது ஆன்மிகம் அல்ல. உலகை புரிந்துகொண்டு, அதில் வாழ்வது,அதன் முன்னேற்றத்துக்காக உலகத்தோடு இணைந்து உழைப்பதே ஆன்மிகம் ஆகும்."
தமிழில்: பூ.கொ.சரவணன் 33/33

Chk: https://www.epw.in/journal/2012/31/special-articles/being-hindu-and-being-secular.html
You can follow @PUKOSARAVANAN.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.