தமிழகத்தில் இருக்கும் அமைப்பு சாரா தொழிலாளர்களில் முக்கிய இடத்தை தனியார் பள்ளி ஆசிரியர்களுக்குத் தான் கொடுக்கணும். 60% ஆசிரியர்களுக்கு ஊதியம் ₹10,000-15000யில் தான் இருக்கும். அதற்கு அவர்கள் கொடுக்கும் உழைப்பு அபரிதமானது. 9-12 வகுப்பு ஆசிரியர்கள் என்றால் பள்ளி தொடங்கும் முன்பும்
முடிந்த பின்னரும் ஸ்பெசல் கிளாஸ். அதற்கு குறைந்தவர்கள் என்றால் பெரும்பாலும் பள்ளி வேன் வருவதற்கு முன் சென்றுவிட வேண்டும். (முக்கியமாக 5 ஆம் வகுப்பு வரை). குழந்தைகளை பத்திரமாக இறக்கி, பள்ளி முடிந்ததும் பின் ஏற்றி விட வேண்டும். இதற்கு வேன் டியூட்டி என்ற பெயர். ஒரு நாளில் 8 பீரியட்
கள் எனில் அதில் குறைந்த பட்சம் 6 பீரியட் கிளாஸ் இருக்கும். மீதமிருக்கும் இரண்டு பீரியட்களிலும் பேப்பர் திருத்துதல், நோட்டு திருத்துதல், டைரி சைன், பிராக்ரஸ் கார்ட் என வேலைகள் இருந்து கொண்டே இருக்கும். பல ஆசிரியர்கள் வீட்டுக்கு இதைக் கொண்டு வந்து வீட்டுப்பாடம் போல் செய்வார்கள்.
6 மணி நேரம் கிளாஸ் எடுத்தால் நா வரண்டு உடல் அலுப்பாகி விடும். அதே அலுப்போடு வீட்டுக்கு வந்து பேப்பர் திருத்த வேண்டும். இது போக பேரண்ட் டீச்சர்ஸ் மீட்டிங், ஆண்டு விழாக்கள் என பெஞ்ச் முதல் தூக்கிப் போட வேண்டும். வீட்டில் இன்னொருவர் வேலை பார்த்தால் பொருளாதார சிக்கல் இன்றி
சமாளிக்க முடியும்.இல்லையெனில் தினமும் அந்த சண்டை வேறு. பெண் ஆசிரியர் எனில், நீங்கள் ஒரு சர்வே எடுத்துப் பாருங்கள், அவர்கள் அம்மாவின் பேக் அப் வீட்டு வேலைகள் எல்லாவற்றிலும் இருக்கும். பணியாளர்கள் எல்லாம் வைத்துக் கொள்ள முடியாது. இந்தக் களேபரத்தில் குழந்தைகளைக் கூட கவனித்துக்
கொள்ள முடியாது. வாத்தியார் பிள்ளை மக்கு என்ற சொலவடை முன்னாளில் எப்படி வந்திருக்குமோ என்னமோ இப்போது தனியார் பள்ளி ஆசிரியர்களை வைத்துத்தான் வந்திருக்கும் எனலாம். அந்த அளவுக்கு பிள்ளைகளை கவனிக்க இயலா செட்யூலில் வாழ்க்கை ஓடும். இன்னொருவர் நிச்சயம் வேலை பார்க்க வேண்டும், இல்லை
பேக் அப் இருக்கவேண்டும் என்ற நிலை. இதே அரசுப்பள்ளி ஆசிரியர் எனில் நிலைமையே வேறு. இந்தியாவைத் தவிர உலகில் வேறேங்கும் அரசு ஆசிரியருக்கும் தனியார் ஆசிரியருக்கும் இருக்கும் சம்பளம், உழைப்பு வித்தியாசம் இப்படி இருக்குமா எனத் தெரியவில்லை.