27% இடஒதுக்கீடு: கொண்டாட வேண்டியதும், எதிர்க்க வேண்டியதும் !

*

27% இடஒதுக்கீட்டில் ஒன்றிய அரசு தாக்கல் செய்துள்ள மனுவில், சமூக நீதி அரசியல் கொண்டாடுவதற்கு என்ன இருக்கிறதோ அதற்கு நிகராக எதிர்த்து போராட வேண்டிய சூழ்ச்சிகளும், வன்மமும், குயுக்திகளும் இருக்கின்றன.

என்னென்ன அவை?
27% இட ஒதுக்கீட்டை, அகில இந்திய ஒதுக்கீட்டில் நிறைவேற்றுவதற்கான விருப்பம் ஒன்றிய அரசுக்கு இருக்கிறது என அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருப்பது, அரசியல் ரீதியான முக்கிய வெற்றி.

ஏனென்றால் ALQல் இடஒதுக்கீட்டை நிறைவேற்றுவது ஒன்றிய அரசின் கடமை அல்ல என்றே இதுவரை டெல்லி சொல்லிவந்தது.
ஆனால், இம்முறை மத்திய அரசு தாக்கல் செய்திருக்கும் மனு, அகில இந்திய தொகுப்புக்கான இட ஒதுக்கீட்டை தன் அதிகாரத்தால் செய்யவேண்டிய கடமைகளில் ஒன்றாக மாற்றிக்கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஒன்றிய அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
நீட் தேர்வு நடைமுறைக்கு வந்த பிறகு, 2017 ஏப்ரலில், சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த தர்மேந்திர யாதவ், சிவசேனாவைச் சேர்ந்த பாட்டில் ஸ்ரீ சிவாஜிராவ் இருவரும் மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீட்டை நிறைவேற்றம் குறித்த விவரங்களை நாடாளுமன்றத்தில் கேட்டிருந்தனர்.
இதற்கு பதிலளித்த மருத்துவம் மற்றும் குடும்ப நல ஒன்றிய அமைச்சகம், '2006 கொண்டுவரப்பட்ட உயர்கல்வியில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீடு உரிமைச்சட்டம், ஒன்றிய அரசின் நிறுவனங்கள், ஒன்றிய அரசு பராமரிக்கும் நிறுவனங்கள், ஒன்றிய அரசு உதவும் நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும். (1)
உயர்கல்விக்கான அகில இந்திய தொகுப்பில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான ஒதுக்கீட்டை வழங்குவது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என தெரிவித்திருந்தது (2)
இதே பதிலை, நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவிலும் ஒன்றிய அரசு குறிப்பிட்டிருக்கிறது. ஆனால், இம்மனுவில் இரண்டு முரண்பாடான கருத்துக்களை ஒன்றிய அரசு சொல்கிறது.

குறிப்பு 11-ல், 'மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துக்கான ஒன்றிய அமைச்சகம் தாக்கல் செய்துள்ள மனுவில், (1)
ஒவ்வொரு மாநிலத்திலும், அம்மாநிலம் பின்பற்றும் இடஒதுக்கீட்டுக் கொள்கையின் அடிப்படையில், அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டை, நிபந்தனையின் அடிப்படையில் நிறைவேற்ற உத்தேசம் இருக்கிறது' என தெரிவித்துள்ளது (2)
அதே மனுத்தாக்கலில், குறிப்பு 14-ல், '2007ல், அபய்நாத் vs டெல்லி பல்கலை வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் SC,ST ஒதுக்கீடு ALQல் வழங்கப்பட்டது. அதேபோல், இப்போது உச்சநீதிமன்றத்தில் நடந்துகொண்டிருக்கும் சலோனி vs மருத்துவ இயக்குநரகம் வழக்கில் (1)
என்ன தீர்ப்பு வழங்கப்படுகிறதோ அதற்கு ஏற்றவகையில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான ஒதுக்கீடு பற்றி முடிவெடுப்போம்' என்கிறது. (2)
மத்திய அரசு நாடாளுமன்றத்தில் சொல்வதுபடி, அகில இந்திய தொகுப்பில் இடஒதுக்கீட்டை நிறைவேற்றுவது மத்திய அரசின் கடமை இல்லை எனில், குறிப்பு 14-ல் உள்ளபடி, உச்சநீதிமன்ற வழிகாட்டுதலைப் பொறுத்துதான் OBC ஒதுக்கீட்டை ஒன்றிய அரசு நிறைவேற்ற முடியும். என்றால் குறிப்பு 11 ஏமாற்றுவேலை
அல்லது, குறிப்பு - 11ல் உள்ளபடி, உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முன்பாகவே
மாநிலங்களுக்கு நிபந்தனை விதித்து, இட ஒதுக்கீட்டை நிறைவேற்ற விரும்பினால், ஒன்றிய அரசுக்கு அதிகாரம் இருந்தும் அரசியல் செய்கிறது.

ஏன் இந்த முரண்பாடு?

சூட்சமம் அகில இந்திய தொகுப்பு ஒதுக்கீட்டு அரசியலில் இருக்கிறது
1984-ல் பிரதீப் ஜெய்ன் VS இந்திய ஒன்றிய வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் தான், ALQ நடைமுறைக்கு வந்தது. 'இந்திய தேசியத்தின் முக்கியத்துவம்' கருதி, ஒரு மாநிலத்துக்குள் இருக்கும் மருத்துவக் கல்லூரியில் அம்மாநில மாணவர்கள், (அ) குடியிருப்பவர்கள் மட்டும்தான் படிக்கமுடியுமா?
அல்லது மற்ற மாநில மாணவர்களும் படிக்கலாமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால், கல்வி என்பது தகுதி (Merit) அடிப்படையில் தான் தீர்மானிக்கப்பட வேண்டும். குடியிருப்பு ( Residence or domicile) அடிப்படையில் தீர்மானிக்கப்படக்கூடாது. (2)
இன்று உருவாகியுள்ள சூழ்நிலைகளால், இந்திய நாட்டின் 'ஒருமைப்பாடு' இப்போது கேள்விக்குள்ளாகியுள்ளது. பிராந்தியவாதம், மொழிவாதம், வகுப்புவாதம் போன்றவை இன்று தலைதூக்கியுள்ளன" என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. (3)
மாநிலம் தாண்டி மருத்துவக் கல்லூரியில் சென்று படிப்பதன் மூலமாக, இந்திய தேசியத்தை காப்பாற்றிவிடலாம் என்கிற எனத் தொடங்கப்பட்ட வழக்கின், இந்தியாவில் பல நூறு ஆண்டுகளாக பேசப்படும் கல்விக்கான தகுதி மதிப்பீடு (Merit Value) எனும் பார்ப்பனியச் சிந்தனையும் இடம்பெற்றிருந்தது.
இந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், ஒரு மாநிலத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியில் MBBS சேர்வதற்கான வரையறையில், அந்த சொந்த மாநிலத்தில் குடியிருக்க வேண்டும் என்கிற அளவு பொதுப்பிரிவு (Un Reseved) எண்ணிக்கையில் 70% ஐ தாண்டக்கூடாது என தீர்ப்பளித்தது. (1)
அதாவது, அன்றைக்கு நடைமுறையில் இருந்த SC / ST பிரிவினருக்கான ஒதுக்கீட்டை நிறைவேற்றிய பிறகு, மீதமுள்ள பொதுப்பிரிவினருக்கான இடங்களில் 70% உள்ளுர் மாநிலத்துக்கும் - 30% அகில இந்திய தொகுப்புக்கும் என தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்தத் தீர்ப்பு மாநிலத்துக்கு உட்பட்ட இடஒதுக்கீட்டை நிறைவேற்றுவதற்கு பொருந்தாது. அது வழக்கம்போல் தொடரும். அந்த இடஒதுக்கீட்டை நிறைவேற்றிய பிறகு மீதமுள்ள பொதுப்பிரிவினருக்கான இடங்களில் மட்டுமே 30%-ஐ அகில இந்திய தொகுப்புக்கு வழங்க வேண்டும்.
மேலும், 3 ஆண்டு காலத்திற்கு ஒருமுறை இந்த சதவீதத்தை ஆய்வு செய்யவேண்டும். ஆனால், எந்தச் சூழ்நிலையிலும், உள்ளுர் பிரநிதித்துவம் 70%-ஐ தாண்டக்கூடாது என தீர்ப்பளிக்கப்பட்டது.
கல்வி முன்னேற்றம் இல்லாத மாநிலங்களை கருத்தில்கொண்டு தற்போதைய சூழலுக்கான தீர்ப்பாக இருந்தாலும், அதிக அளவிலான மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவதே நிரந்தர தீர்வாக முடியும் என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதேபோல், மருத்துவ மேற்படிப்பான MD,MS போன்றவற்றுக்கான இடங்களை ஒதுக்கும்போது, சொந்த மாநிலம் அல்லது ஒரே கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்து பட்ட மேற்படிப்பு செல்வதற்கான குடியிருப்பு இடஒதுக்கீடு (Domicile resevation) 50% - ஐ தாண்டக்கூடாது என தீர்ப்பளித்தது.
அதாவது, MBBS கல்விக்கு வகுப்புவாரி இடஒதுக்கீடு நிறைவேற்றியது போக 30% பொதுப்பிரிவு இடங்களும், வகுப்புவாரி இடஒதுக்கீடு நிறைவேற்றியது போக மீதமுள்ள பொதுப்பிரிவு இடங்களில் 50% இடங்கள் மருத்துவ மேற்படிப்புக்கு.. (1)
குடியிருப்பு (residence) அல்லது கல்லூரி (institutional) முன்னுரிமை (preference) இல்லாமல், அகில இந்திய நுழைவுத்தேர்வின் அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும் என்பதே தீர்ப்பின் சாரம். (2)

இதை எதிர்த்து பல்வேறு மாநிலங்களும் வழக்கு தொடுத்தன.
இதையடுத்து, இந்திய அரசு அளித்த திட்டத்தின் அடிப்படையில், வகுப்புவாரி ஒதுக்கீடு உட்பட எதையும் கணக்கில் கொள்ளாது, ஒட்டுமொத்தமாக இருக்கும் MBBS இடங்களில் 15%-ம்,
MS/MD போன்ற மேற்படிப்புகளில் 25% -ம் அகில இந்திய தேர்வுகள் மூலம் என தீர்ப்பளித்தது உச்சநீதிமன்றம்.
2003 வரை இதுதான் நடைமுறை. 2003-ல் அகில இந்திய ஒதுக்கீட்டில் வெவ்வேறு மாநிலங்களில் MBBS முடித்த டெல்லியைச் சேர்ந்த மாணவர்கள் டெல்லி பல்கலையில் மருத்துவ மேற்படிப்பில் சேர விரும்பியபோது உள்ளூர் விதிகளை காரணம்காட்டி அவர்களின் விண்ணப்பத்தை நிராகரித்தது டெல்லி பல்கலைக்கழகம்.
இதனையடுத்து அம்மாணவர்கள் தொடர்ந்த வழக்கில்தான், ஒவ்வொரு மாநிலமும் குடியிருப்பு, கல்லூரி முன்னுரிமை அடிப்படைக்கு வெவ்வேறு விதிகளை வைத்திருப்பதால், குடியிருப்பு சார் மருத்துவ ஒதுக்கீடு ஆதிக்கம் செய்வதாக கருத்து தெரிவித்த உச்சநீதி மன்றம், ALQ 50% ஒதுக்கவேண்டும் என தீர்ப்பளித்தது.
இந்தத்தீர்ப்பு 2005-06 கல்வியாண்டில் நடைமுறைக்கு கொண்டுவர அறிவிக்கப்பட்டது. ஆனால், SC, ST இடஒதுக்கீடு நீக்கலாக, 50% இடங்களை அகில இந்திய தொகுப்புக்குக் கொடுப்பதில் பெரும் சிக்கல் எழுந்தது. பெரும்பான்மையான மாநிலங்கள் எண்ணிக்கை பட்டியலே அனுப்பவில்லை.
இதனால், மீண்டும் வழக்கு தொடரப்பட்டு, அகில இந்திய தொகுப்புக்குள்ளாக SC, ST இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது. 2007ல் அபய்நாத் vs ஒன்றிய அரசு வழக்கில் இந்தத் தீர்ப்பே இறுதிசெய்யப்பட்டு அகில இந்திய தொகுப்பிற்கான மருத்துவ மேற்படிப்பில் SC,ST ஒதுக்கீடு உறுதிசெய்யப்பட்டது.
சரியாக இதே காலத்தில் தான், 2006ம் ஆண்டு, ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கான கல்வி இடஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது. பெரும் போராட்டத்துக்கு பிறகு, நூற்றாண்டுகால இயக்கங்களின் உழைப்புக்குப் பிறகு, கிடைத்த அந்த உரிமையில்தான் இன்றைய சிக்கல் நடந்துகொண்டிருக்கிறது.
இன்று நடக்கும் விவாதத்தின் முக்கிய ஆதாரமே, அகில இந்திய பிற்படுத்தப்பட்ட நல பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்டிருக்கும் ஆவணம் தான். அந்த ஆவணத்தின் அடிப்படையில், 2013-2020 வரையிலான 8 கல்வி ஆண்டுகளில், 72491 இடங்களில் ஒரு இடம்கூட OBC ஒதுக்கீட்டில் நிரப்பப்படவில்லை.
அதாவது, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு, 27% இடஒதுக்கீடு அடிப்படையில் வந்து சேரவேண்டிய சுமார் 19,573 இடங்கள் பொதுப்போட்டிக்கு சென்றுள்ளன.

இந்த பொதுப்போட்டியில், மிகக்குறைவான பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் மட்டுமே தேர்வாகியுள்ளனர்.
உதாரணமாக, 2016ல் உள்ள மொத்தமுள்ள 5696 அகில இந்திய தொகுப்பிற்கான மருத்துவ மேற்படிப்பு இடங்களில் 175 பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் தேர்வாகியுள்ளனர். 27% இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருந்தால், 2016ல் மட்டும் 1538 இடங்கள் உறுதியாக பிற்படுத்தப்பட்டோருக்கு வந்திருக்கும்.
2016 மருத்துவ பட்டப்படிப்புக்கான 3519 ALQல் 66 OBC மாணவர்களும் மட்டுமே தேர்வாகியுள்ளனர். 27% ஒதுக்கீடு உரிமை வழங்கப்பட்டிருந்தால் 950 இடங்கள் OBC மக்களுக்கு உறுதிசெய்யப்பட்டிருக்கும். இப்போது அந்த இடங்களில் எல்லாம் மிககணிசமான அளவில் உயர்சாதி வகுப்பினர் மட்டுமே பெற்றுள்ளனர்.
2007ல் வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில், SC, ST மக்களுக்கு ஒதுக்கீடு உறுதிசெய்யப்பட்டதைப் போல, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான ஒதுக்கீட்டையும் உறுதிசெய்தால் இவையெல்லாம் நடந்திருக்கும் என்பதே வாதம்.

இந்த புள்ளிவிவரங்கள் எல்லாமே 2013க்கு பிறகானவை.
ஆனால், 2007-2013 வரையிலான காலகட்டத்திலும் கூட அகில இந்திய தொகுப்பில் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்பதே உண்மை.

உண்மையில், அகில இந்திய தொகுப்பில் வழங்கப்படும் SC-ST ஒதுக்கீட்டையேகூட ஒன்றிய அரசு கடமை உணர்ச்சியால் வழங்கவில்லை.
உச்சநீதிமன்ற தீர்ப்பால் வழங்கியது. உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு இவற்றை நிறைவேற்றுவதால் ஒன்றிய அரசில் இருக்கும் கட்சிகளுக்கு அரசியல் லாபம் அதிகம்.
ஏனென்றால், உயர்சாதி பண்பாட்டை காக்கின்ற இந்திய தேசிய அரசியல் செய்யும் தேசியக் கட்சிகளுக்கு, உச்சநீதிமன்றம் சொன்னால் கொடுக்கிறோம் என்று சொல்லி தங்கள் உயர்சாதிக்கான அரசியல் வாழ்வை தக்கவைத்துக்கொள்கின்றன;
இன்னொருபக்கம் நாங்கள் செய்யத்தயார் ஆனால் உச்சநீதிமன்றம்தான் தீர்ப்பு வழங்கவில்லை என பிற்படுத்தப்பட்டோர் அரசியலை சிக்கலான விவாதமாகவே நீடிக்கவிடுகின்றன.

இதனால்,
OBC இடஒதுக்கீடு அரசியல் மாநிலங்களுக்கு உட்பட்டதாக சுருங்கிவிடுகிறது.
பிற்படுத்தப்பட்டோர் அரசியலை ஒரு தேசிய எழுச்சியாக மாறிவிடாமல் தடுக்க இது உதவுகிறது.

ஆளும் பாஜக நேற்று (19.06.20) அன்று தாக்கல் செய்திருக்கும் மனுத்தாக்கலிலும் அத்தகைய குயுக்தி இருக்கிறது.

ALQக்கான தீர்ப்புப்படி, 50% இடங்கள் உள்ளூர் மாநில மக்களுக்கு - 50% வெளிமாநிலத்தவருக்கு.
இந்த 50% வெளிமாநிலத்தவரில் 100 இடங்கள் இருக்கிறது என்றால், அதில் 22.5% SC, ST - 3% மாற்றுத்திறனாளிகளுக்கானது. மீதமுள்ள 74.5% இடமும் பொதுப்போட்டி. இந்த 74.5% இடத்தையும் தகுதி மதிப்பீடு (Merit value) என்கிற பெயரில் பொதுப்பிரிவினருக்கான ஒதுக்கீடாக நினைக்கிறது பாஜக.
2004ல், 25% ஆக இருந்த அகில இந்திய ஒதுக்கீட்டை 50% ஆக திருத்தியபோது உச்சநீதிமன்றம் என்ன தவறுசெய்தததோ அதே தவறை இப்போது ஒன்றிய பாஜக அரசு தனக்கான லாபக்கணக்கோடு செய்கிறது.

அதனால்தான், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கும் மனுவில், (1)
இந்தி ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான ஒதுக்கீட்டை, ஏற்கனவே உள்ள பட்டியலின - பழங்குடி ஒதுக்கீடு, மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீடு, பொது நுழைவுக்கான ஒதுக்கீடு இவற்றை பாதிக்காத வகையில் நிறைவேற்ற, (2)
அகில இந்திய தொகுப்பின் மொத்த இடங்களுக்குள் - அதிகபட்சம் 50% வரை, மாநில அரசுகள் மற்றும் மருத்துவக் கழகத்தின் ஒத்துழைப்போடு, *அகில இந்திய ஒதுக்கீட்டின் எண்ணிக்கை உயர்த்தி* நிறைவேற்றப்படும் என நிபந்தனை விதிக்கிறது ஒன்றிய அரசு. (3)
மத்திய அரசு சொல்வதுபோல எண்ணிக்கையை உயர்த்த வேண்டுமானால், அந்தந்த மாநிலத்தில் கடைப்பிடிக்கப்படும் இடஒதுக்கீட்டு அளவுகளுக்கு ஏற்ப, மாநிலங்கள் இடங்களைக் கொடுத்துவிட வேண்டும் என்கிறது ஒன்றிய அரசின் மனுத்தாக்கல்.
இங்கே கவனிக்க வேண்டியது, ஏற்கனவே இருக்கும் உயர்கல்வி இடஒதுக்கீட்டுக்கு சிக்கல் வராமல் நிறைவேற்ற வேண்டும் என சொல்லும்போது உயர்சாதியினர் அதிகம் பயன்பெறும் unreserved category-க்கும் எந்த சிக்கலும் வரக்கூடாது என ஒன்றிய அரசு சொல்கிறது.
Unreserved category - Marit Value அடிப்படையிலான என சொல்லப்படுகிற ஒதுக்கீடு பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, கூடுதல் இடங்கள் அகில இந்திய தொகுப்புக்கு வேண்டும் என்கிறது ஒன்றிய அரசு.

இதன்மூலம், ஒரு மாநிலம், தன் மக்களுக்காக உருவாக்கியிருக்கும் மருத்துவக் கல்வி இடங்களை இழக்க நேரிடும்.
தென்மாநிலங்களில் உள்ள அதிக எண்ணிக்கையிலான இடங்களை, வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் கூடுதலாக பிடிக்கவே இது வழிவகுக்கும்.

அகில இந்திய தொகுப்பில் பிற்படுத்தப்பட்டோர் பயன்பெற்றாலும், வடமாநில பிற்படுத்தப்பட்டோர் தான் அதிகம் பயன்பெற வேண்டும் என நினைக்கிறது மத்திய அரசு.
அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான அடிப்படை வரலாறே, இந்திய தேசியத்தை காக்க வேண்டும் என்றால் - மாநிலம் தாண்டி மாநிலம் மருத்துவம் படிக்கவேண்டும் என்பதை மட்டுமே இலக்காக கொண்டு எடுக்கப்பட்ட முடிவு அது.
ஆனால், மாநிலம் விட்டு மாநிலம் படிக்கும்போதும் சமூகநீதி நிலைநிறுத்தப்பட வேண்டும் என்பது இந்திய அரசியல் சாசனம் வழங்கும் சமத்துவ உரிமைக்கான அடிப்படையாக இருக்க முடியும்.
அந்த அடிப்படையை நிறைவேற்றும் ஆசை உண்மையிலேயே ஒன்றிய அரசுக்கு இருந்தால், உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான 27% சட்டத்தில் உடனடியாக திருத்தம் கொண்டு வரவேண்டும். அகில இந்திய தொகுப்புகளிலும் 27% ஒதுக்கீடு அடிப்படை என சட்டத்திருத்தம் செய்யவேண்டும்.
பிற்படுத்தப்பட்டோருக்கு அகில இந்திய தொகுப்பில் ஒதுக்கீடு வழங்க தயார் என ஒன்றிய அரசை சொல்ல வைத்தது சட்டப்போராட்டம் என்றால், அதை மாநில நலன்கள் பாதிக்காமல் செய்து முடிக்கவேண்டியது அரசியல் போராட்டம்.
You can follow @VGananathan.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled:

By continuing to use the site, you are consenting to the use of cookies as explained in our Cookie Policy to improve your experience.